நமை உணர்த்துதல்

நாமென்பது என்னவென

பிறரறிய செய்தலிங்கே,

இயலாமையின் உச்சமென

இருப்பததன் பொருளென்ன?

.

உணர்த்துதலின் உளச்சிக்கல் 

நம்முகத்திற்கு முகம்வரைந்து 

நடிப்பதனை நிர்பந்தமாய் 

மாற்றுமந்த காரணமென்ன?

.

உணர்த்துதலில் பிழைதிருத்தி 

உளமுழுதும் திறந்திட்டாலும்,

உணர்தலெனும் சிக்கல்தனை

ஒழுங்கமைத்தல் சாத்தியமோ?

.

நமைநாமே முழுதுணர்தல் 

எனும்கடலை கடத்தலொன்றே, 

உணர்த்தலுக்கும் உணர்தலுக்கும் 

உய்வளிக்கும் ஓர்வழியோ?..

.

**Picture taken from Google

Advertisements

சொல்…

உடல்தாண்டி உளம்தாக்கி 

உளமழுக உடல்நொறுக்கும்,

உள்ளதனை உய்த்துணர்ந்து 

உயிர்ப்பிக்கும் உயிராகும்,

சொல்லதுவும் உடுத்திக்கொள்ளும்

உருவமிங்கே ஓராயிரம்.

**********

சொல்லிவிட்ட சொல்லனைத்தும் 

சொன்னவனை சிறைபிடிக்க,

சொல்லாத சொல்லெல்லாம் 

தன்னுருபெருக்கி செவிமறைக்கும்.

**********

உண்மையது உடையக்கண்டு 

உளமெரிந்து உதடுதிர்க்கும்,

சாபமெனும் சொல்லொன்றே 

ஊழியதின் உறைவிடமாம்….

.

**Picture taken from Google

அழிவு

ஆக்கமது கொண்டுள்ள, 

அழகியழின் நிகர்மதிப்பு, 

அழிவுள்ளும் அடங்கியுள்ள 

சூட்சமத்தை அறிவோமோ?

.

அணுவணுவாய் அடிக்கியிங்கு 

அமைந்திடும் அண்டமிதில் 

அரைநொடியில் அழிந்துமறையும் 

எரிமீனும் ஆயிரமாம்.

.

அணுவின்நுண் கருவதுவும் 

இயற்கையதின் குழந்தையெனில், 

செயற்கையெனும் சொல்லிங்கே 

குறிக்குமந்த பொருளென்ன?

.

ஆனந்தக்கூத்தாடி எழுந்து நிற்கும் 

ஊழியதை, விழிநிறைந்து வழிந்தோட 

கண்டுநிற்கும் நிலைபோல, பேறேதுவும் 

இவ்வுலகில் உள்ளதென நானறியேன்.

.

**Picture taken from Google

நேற்று…

தாண்டிவிட்டதன் தவிப்பும்,

நேர்ந்துவிட்டதன் நெருடலும்,

நிகழ்ந்ததளிக்கும் நிறைவுமென,

நேற்றெனும் சொல்லிலிருந்து

மனம் விரும்பும் ருசியாயிரம்.

.

கடந்துவிட்டதனாலேயே 

கனம்பெறுகின்றனவோ, அக்கணங்கள்…

நேற்றளிக்கும் ருசியதனை, 

நிகழதனில் இனங்காணல், 

மண்ணமைந்த மானுடர்க்கு, 

இவ்வையகத்தில் சாத்தியமோ?…..

.

**Picture taken from Google

கசப்பு


முகஞ் சுழித்து, நாவிழுத்து, 

புறஉலகில் ஒதுக்கிட்டாலும்,

உள்ளிருளில் ஒளிபிடித்து 

அகஆழம் இறங்கிட்டால்,

கசப்பின் மீது கொண்டுள்ள 

காதலின் தடயம் கண்டடைவோம்.

.

உரு பெருக்கி, நிறம்கரிந்து, 

கண்மறைத்து, நம்முன்னே,

கசப்பதுவும் தன்னுருவம்,

காட்டி நிற்கும் தருணங்களில்,

உள்ளாழ அகத்தினிலே 

கசப்பூற்றின் வாய்திறந்து,

சேர்த்திட்ட கணங்களனைத்தும் 

மனம் நிரப்பி நமை கரைக்கும்.

.

கசப்பதுவின் ருசியுணர்ந்த 

நாவதுவும் உள்திரும்பி,

மனம்நிரைத்து நுரைத்து நிற்கும் 

தன்னிரக்கச் சாறதனில்,

தனை அழுத்தி, 

அதுவளிக்கும் மயக்கம்தனில் 

முடிவிலியாய் மூழ்கியிருக்கும்.

.

*Picture taken from Google

உரமாதல் எதன்பொருட்டு?..

உயிரெனவே உணர்ந்ததனைத்தும், 

தன்னுயிரதனின் பிரதிதனை 

இவ்வுலகில் நிலைநிறுத்த, 

காலமதில் தனைக்கரைத்தல், 

அணுவளவும் பிசிறின்றி 

அனிச்சையாய் நிகழ்வதேனோ?…

.

கிடைத்திட்ட வாழ்விதனில்,  

விழைவுகளை விலையாக்கி, 

தன்சந்ததியை தான்பேண, 

உயிரனைத்தும் ஒப்புவதேனோ?…

.

உயிரெரித்து, உருவழித்து, 

வழித்தோன்றலுக்கு உரமாகி, 

வாரிசதனின் வாழ்வுகண்டு 

இவ்வுயிரும் அடைவதென்ன?….

.

**Picture taken from Google

அகம் நிரம்பும் கணம்

பிடிப்பதற்காய் கைதுழவாது, 

நோக்கதனை முன்செலுத்தாது,

சிறகுதனின் சிறையிலிருந்து 

தனைவிடுத்த இறகதுவும், 

அலைகாற்றில் ஒப்புவித்து, 

தன்னகம்நிரப்பும் கணம் போல, 

முடிவற்ற ஆழ்தனிலே, 

யுகயுகமாய் மூழ்கியெந்தன், 

அகம்நிரம்பி வழிந்தோடும் 

காட்சிதனை காணவிருப்பம்….

.

**Picture taken from Google

நினைவுகள்

ஆழ்மன இடுக்குகளில், 

அழுந்தி புதைந்திட்ட 

நினைவதனை மீட்டெடுத்து, 

அருந்துமந்த நிமிடங்கள், 

நிகழ்வளிக்கும் அயர்விலிருந்து 

எனைவிடுக்கும் கூர்வாளம்.

.

நிகழதனின் வேகத்திலும், 

மறுக்கமுடியா நிர்பந்தத்திலும், 

கைநழுவி கண்மறைந்த கணங்களனைத்தும், 

நினைவுதனாய் நோக்குகையில், 

அணுவதனின் துல்லியத்தில் 

என்அகத்தை மூழ்கடிக்கும் 

இரகசியத்தை வியக்கிறேன்….

.

**Picture taken from Google

இருள்


இருள்தனை போன்று,

இனிதானது இங்கேது?…

ஒளிக்கீற்றின் கூர்நெழித்து 

உள்ளிழுத்து, உருவழிக்கும் 

இருளாற்றலுக்கு இணையான 

பேராற்றல் இங்கேது?…

.

ஒளியளிக்கும் கூசுதலுக்காய் 

எனில்கூடிய அந்நியத்தை 

அறுத்தெடுத்து தொலைவெறிந்து 

எனைஉணரும் விடுதலைதனை 

அளிக்கவல்ல ஆசான், 

இருளைபோல இங்கேது?…

.

**Picture taken from Google

​இதோ நிகழவிருக்கிறது அக்கணம்…..


இதோ நிகழவிருக்கிறது அக்கணம்…..

உலகியலின் நிர்பந்தத்தை

உதாசீனமாய் நிராகரிக்க, 

உந்துதலை எனக்களிக்கும் 

கணம்இதோ நிகழவிருக்கிறது…,

.

ஜன்னலோரம் எனக்களித்து, 

ஓட்டுநராய் தானமர்ந்து 

பாதையளிக்கும் அயர்வுதனை 

என்பார்வையிலே தோன்றவிடா, 

கணம்இதோ நிகழவிருக்கிறது…,

.

உதிர்த்தலிலோ உலகியலிலோ

உச்சமதை அடையாவிடினும் 

நிச்சயமாய்தோன்றுகிறது 

அக்கணம்இதோ நிகழவிருக்கிறது…,

.

மனிதமிது மண்பிறந்த நாள்முதலாய், 
அடுத்த கணம் தீர்வளிக்கும் 

எனக்காட்டும் மாயைதனை 

நானறிந்தும், மனமின்னும் நம்புகிறது…,

.

இதோ, இதோ,  நிகழவிருக்கிறது அக்கணம்…,

.

**Picture taken from Google